ராஜ்யசபாவில் பா.ஜ., அரசுக்கு பெரும்பான்மை?

raj sabaபுதுடில்லி: சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் ராஜ்யசபாவில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பெரும்பான்மைக்கு தேவை 123

ராஜ்யசபாவில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 245. இதில் பெரும்பான்மை பெற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தற்போது, 80 எம்.பி.,க்களின் ஆதரவு தான் உள்ளது. பீஹாரில் சில நாட்களுக்கு முன் கூட்டணி மாறி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு உருவாகி உள்ளது. எனவே, ஐக்கிய ஜனதா தளத்தின், ஒன்பது எம்.பி.,க்களின் ஆதரவை சேர்த்தால், தே.ஜ., கூட்டணி அரசின் பலம், 89 ஆக உயரும். குஜராத்தில் இருந்து, அமித்ஷா, ஸ்மிருதி இரானி மற்றும் காங்., கட்சியில் இருந்து பறிக்கப்பட உள்ள ஒரு இடம் ஆகிய மூன்றை சேர்த்தால், அரசின் பலம், 91 ஆக உயரும்.

26 எம்.பி.,க்கள் ஆதரவு

அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்., இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளிடம், 26 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த கட்சிகள் பெரும்பாலும் ஆளும் அரசை தான் ஆதரித்து வருகின்றன. எனவே, இதையும் சேர்த்தால், அரசின் பலம், 117 ஆக உயரும். இத்துடன் நான்கு நியமன எம்.பி.,க்களின் ஆதரவை சேர்த்தால், அரசின் பலம், 121 ஆக உயரும். இது கிட்டத்தட்ட, பெரும்பான்மையான, 123 எம்.பி.,க்களின் எண்ணிக்கையை நெருங்கிய விஷயமாகும். உ.பி.,யில் நடக்கும் தேர்தல் மூலம், 9 எம்.பி.,க்களில் எட்டு எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு கிடைக்கும்.

பின்னடைவு உண்டு:

ஆனால், பீஹாரில் அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., அரசுக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது. தற்போது அந்த மாநிலத்தில், பா.ஜ.,வுக்கு இரண்டு, ஐக்கிய ஜனதா தளத்திற்கு, நான்கு எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், அடுத்த ஆண்டு தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் – காங்., கூட்டணி மூன்று இடங்களை பறித்து கொள்ளும். இது பா.ஜ., அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*