பத்திரிகைத் துறையின் மரியாதையை மீட்க என்ன வழி?

பத்திரிகைத் துறையின் மரியாதையை மீட்க என்ன வழி?press1

ஜனநாயக நாட்டை தாங்கி நிற்கும் நான்கு முக்கிய தூண்களில், ஒன்று பத்திரிகை துறையாகும். நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை ஒழிவு, மறைவின்றி அப்படியே வெளிச்சம்போட்டு காட்டுவதே பத்திரிகைத் துறையின் தலையாய கடமையாகும்.

உண்மை, நேர்மை ஆகிய இரண்டும் பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் கடைபிடிக்க வேண்டிய தர்மம். தன்னலம் கடந்து பொதுநலம் ஒன்றையே கடைப்பிடிப்பது பத்திரிகையாளர்களின் தன்னிகரில்லா கடமையாகும்.
ஆனால், இன்று இவற்றையெல்லாம் மறந்து பத்திரிகைகளும், பத்திகையாளர்களும் செயலாற்றிக் கொண்டிருப்பது தேச நலனுக்கும், பத்திரிகைத்துறைக்கும் பாதகம் விளைவிக்கும் செயலாக உள்ளது.press2

நாட்டில் நடக்கும் லஞ்சம், ஊழல், அநியாயம், அக்கிரமம், அதர்மம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, தட்டிக்கேட்டு அதற்கான தண்டனையை பெற்றுக்கொடுக்கும் வல்லமை படைத்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் லஞ்ச லாவண்யத்திற்கு ஆட்பட்டுவிட்டால், இந்த நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்றமுடியாது.

தர்மத்தை மட்டுமே தனதாக கொள்ள வேண்டிய பத்திரிகைகளும், தியாகத்தை மட்டுமே கடமையெனக் கொண்டு செயலாற்ற வேண்டிய பத்திரிகையாளர்களும் ஏன் இன்று, இந்த இழிநிலைக்கு ஆளாகியுள்ளனர்? என்பதை ஆய்ந்தறிய வேண்டியது காலத்தின் கட்டாயமே.

முன்பெல்லாம் பத்திரிகைத் துறையில் பணி கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அதோடு, நிருபர்கள் என்றால் சமுதாயத்தில் பெரும் மதிப்பிருந்தது. தகுதி, திறமை, நேர்மை மற்றும் ஒழுக்கம் உடையவர்கள் மட்டுமே நிருபர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.press3

அவர்களுக்கு செய்தி எழுதும் முறை, தகவல் சேகரிக்கச் செல்லும்போது நடந்துகொள்ள வேண்டிய முறை பற்றியெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சியின் அடிப்படையிலேயே பத்திரிகையாளர்கள் நேர்மையாகவும், கடமை உணர்வு மிகுந்தவர்களாகவும், ஒழுக்க சீலர்களாகவும் திகழ்ந்தனர்.

சமீபகாலமாக பத்திரிகைகளில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்படுவோரில் சிலர், இந்த விதிமுறைகளுக்கு மாறாகவே உள்ளனர். யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளராகலாம், எப்படி வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற இழிநிலை உருவாகி உள்ளது.

ஏன் இந்த நிலை என்று ஆய்ந்தால், பத்திரிகை நிர்வாகங்கள், பத்திரிகைத் தர்மத்திலிருந்து வெகுதூரம் விலகி சென்றிருப்பது தெளிவாக தெரிகிறது.

தற்போது கவர் (லஞ்சம்) கலாச்சாரம் பத்திரிகைத் துறையிலும், பத்திரிகையாளர்களிடமும் கொடிகட்டி பறக்கிறது. கவர் பெற்றுக்கொண்டு செய்தி எழுதுவது மட்டுமில்லாது, சில இடங்களில் கட்ட பஞ்சாயத்தும் நடத்துபவர்களாகவும், சில நிருபர்கள் புரோக்கர்களாகவும், அரசியல்வாதிகளை அண்டி பிழைப்பவர்களாகவும் செயல்படுகின்றனர்.

பத்திகையாளர்களின் இந்த அவலங்களை அறிந்தும், புரிந்தும் பத்திரிகை நிர்வாகம் கண்டுகொள்ளாது இருப்பதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். போட்டி நிறைந்த இந்த பத்திரிகைத் துறையில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் வருமானத்தையும், லாபத்தையும் மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுகின்றன.

இதனால் நாளுக்கு நாள் பத்திகையாளர்கள் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், மரியாதையும் குறைந்து கொண்டே வருகிறது. இவற்றையெல்லாம் பத்திரிகையாளர்களும், பத்திரிகைளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நாட்டின் நான்காவது தூணான பத்திரிகைத் துறைச் சீர்கெட்டு போகாமல் கம்பீரமாகத் தூக்கி நிறுத்த பத்திரிகையாளர்களும், பத்திரிகை நிறுவனங்களும் பாடுபட வேண்டும்.

-மகேஷ்வர சீதாபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*