சென்னை மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவக செயல்பாடுகளை அறிய திரிபுரா மாநில கல்வி அமைச்சர் வருகை: ஆணையர் தா.கார்த்திகேயன் விளக்கம்

14THAMMACANTEENசென்னை மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவக செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக திரிபுரா மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் சென்னைக்கு வருகை தந்தார்.

சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் காலைவேளைகளில் இட்லி, பொங்கல், பிற்பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், கலவை சாதம், இரவில் சப்பாத்தி ஆகியவை வழங்கப்படுகின்றன. ஒரு இட்லி ரூ.1, பொங்கல் ரூ.5, தயிர் சாதம் ரூ.3, கலவை சாதங்கள் தலா ரூ.5, இரு சப்பாத்திகள் ரூ.3 என மிக மலிவான விலையில் விற்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் ரூ.6 லட்சம் அளவுக்கு விற்பனை நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை பல்வேறு மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், திரிபுரா மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் சென்னைக்கு நேற்று வருகை தந்தார். சென்னையில் செயல்படும் சில அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று அவர் பார்வையிட்டார். மேலும் ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த அவர், அம்மா உணவகம் செயல்படும் விதம் பற்றி கேட்டறிந்தார்.

உணவகத்தின் நோக்கம்

அம்மா உணவகத்தின் நோக்கம், அதற்கு ஆகும் செலவு, மகளிர் குழுக்கள் மூலம் நடத்தும் முறை, உணவகத்துக்குத் தேவையான மளிகை, காய்கறிகள் மற்றும் காஸ் கொள்முதல், நிதி மேலாண்மை ஆகியவை குறித்து மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் அவருக்கு விளக்கினார். அப்போது மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி), மாநகர சுகாதார அலுவலர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது, “மாநகராட்சி செயல்படுத்தி வரும் அம்மா உணவகங்களைப் போலவே, திரிபுரா மாநிலத்தில் மலிவு விலை உணவகங்களை நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், இங்குள்ள அம்மா உணவகங்களைப் பார்வையிட திரிபுரா மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் சென்னை வந்துள்ளார்” என்றார்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*